தொழில் கல்வி

எங்கள் அலுவலகத்தில் சில தகர டப்பாக்களும், தேவைப்படாத தாள்களும் கோணிப் பைகளும் நிரம்பியிருந்தன. சட்டப்படி அவற்றை மாவட்ட அளவில் குத்தகை பெற்றவரே வந்து எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அவருக்குத் தகவல் அனுப்பிய போதும் அவர் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு லாரி கொண்டு வந்து அவற்றை எடுத்துச் செல்லும் அளவுக்கு இல்லை என்பதே காரணம். அவை அலுவலகத்தில் இடம் அடைத்துக் கொண்டிருப்பது ஒரு புறம். இன்னொரு புறம் எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், முதலியோர் அலுவலர் இல்லாத நேரம் அங்கே உட்கார்ந்து புகைப் பிடிப்பர். எனக்குத் திக் திக் என்று அடித்துக் கொள்ளும். எனது மேலதிகாரியிடம் எனது பயத்தைத் தெரிவித்தேன். “ஆற்று மணலை அள்ளுவதற்கு அனுமதி கேட்டால் கொடுக்க மாட்டார்கள். இரவோடு இரவாக அள்ளிக் கொண்டு போனால் கண்டு கொள்ள மாட்டார்கள்” என்று அவர் பதில் சொன்னார். எனக்குப் புரிந்தது. தெருவில் சென்ற ஒரு பழைய பேப்பர் வாங்குபவரைக் கூப்பிட்டு அவற்றை விற்றுக் கிடைத்த பணத்தை அரசுக் கணக்கில் சேர்த்தேன். நாளது வரை எவனும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பின்னால் எனக்கு வீட்டுத் தேவைக்காக ஒரு கதவு தேவைப்பட்டது. பழைய வீட்டுச் சாமான்கள் விற்கும் கடைக்குப் போய் ஒரு கதவை விலைக்குக் கேட்டேன். கடை முதலாளி என்னைப் பார்த்துவிட்டு “ஐயா என்னைத் தெரிகிறதா?”, என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. “நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் உங்கள் அலுவலகத்தில் பழைய பேப்பர் உடைசல் சாமான்கள் வாங்கிச் சென்றேனே? நினைவிருக்கிறதா?” என்று நினைவூட்டினார். எனக்கு நினைவு வந்தது. பழைய பேப்பர் வாங்கி விற்பவர். நான்கு ஆண்டுகளில் மேசையில் ஃபோனோடு (அப்போது ஃபோன் தொடர்பு கிடைப்பதே சிரமம்)    நான்கு சிப்பந்திகளை வைத்து வேலை வாங்கும் ஒரு முதலாளி.

இந்த ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல. எங்கள் அலுவலகத்திலேயே ஒரு அலுவலக உதவியாளர். அவர் ஓய்வு நேரத்தில் பொழுதை வீணாக்காமல் ஒரு டீக்கடை தொடங்கினார். அலுவலகம் வரும் நேரங்களில் கடையைக் கவனித்துக் கொள்ள அவரது உறவினர் ஒருவரைக் கொண்டு வந்திருந்தார். சில நாள்களில் நான்கு கடைகள் ஆயின. அவரது மனைவி புத்திசாலி.அரசு அலுவலகம் ஒன்றில் கிளார்க் ஆக இருந்த அவர் (பட்டதாரியும் கூட) தனது கணவன் அலுவலக உதவியாளராக இருந்தும் (அதன் பழைய பெயர் பியூன்) டீக் கடைகளை நினைத்து அவருக்கு வாழ்க்கைப்பட்டார்.

இந்த இருவர் கூடப் பரவாயில்லை. அடிப்படைக் கல்வி இல்லை. ஆனால் நான் சந்தித்த இன்னொரு நபர் வேறுபட்டவர். எங்கள் வீட்டின் அருகில் மளிகைக் கடை வைத்திருந்தார்.  சிப்பந்திகளைப் போல் அவரும் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு நிறுத்துப் போடுவார். அவரை முதலாளி என்று சொல்ல முடியாது. நான் கலந்து கொண்ட ஒரு பொதுக் கூட்டத்தில் அவரைத் தலைமை ஏற்க அழைத்திருந்தார்கள். எனக்குச் சற்று ஆச்சரியாமாக இருந்தது. அவர் பேசத் தொடங்கியதும் இன்னும் ஆச்சரியம். பொருளாதாரக் கோட்பாடுகளை விவரிக்கத் தொடங்கியது என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் அமர்ந்த உடன் அவரிடம் “எப்படி நீங்கள் பொருளாதார உண்மைகளை ….” என்று தொடங்கியதும், “நீங்கள் நினைப்பது புரிகிறது. நான் இந்த மளிகைக் கடை திறக்கு முன் பொரளாதார விரிவுரையாளராக  இருந்தேன். எனக்குப் பேராசிரியர் பதவி உயர்வு கொடுக்காமல் வேறு ஒருவருக்குக் கொடுத்ததால் வேலையை உதறிவிட்டுச் சென்னை வந்து வேலை தேடினேன். கிடைக்கவில்லை. துணிச்சலுடன் இந்தக் கடையைத் தொடங்கினேன். பேராசிரியரின் ஊதியத்தை விட நான்கு மடங்கு சம்பாதிக்கிறேன். என் உறவினர் நாலு பேருக்கு வேலையும் கொடுத்துள்ளேன்” என்று முடித்தார்.

சென்னையில் நான் குடியிருந்த வீடுகளின் சொந்தக் காரர்கள் பலர் டீக்கடைச் சொந்தக்காரர்கள். நினைவில் கொள்ளுங்கள். படித்த படிப்புக்கும் பொருளீட்டும் திறனுக்கும் தொடர்பு கிடையாது. பின்னே என்ன? அரசு அலுவலர் என்ற ஒரு பகட்டு அந்தஸ்து இருப்பதை எண்ணி வேலை செய்கிறோம். நமது சிந்தனா சக்திகளை ஒரு சில ஆண்டுகளில் இழந்துவிடுகிறோம். இதை விட்டால் நமக்கு வேறு பிழைப்பும் தெரியாது. அதனால்தான் விற்பனை வரி அதிகாரியாக இருந்தவர் ஓய்வுக்குப் பின் ஒரு மளிகைக் கடையில் கணக்கு எழுதும் வேலையில் சேர்கிறார். காவல்துறை உதவி ஆய்வாளர் ஓய்வுக்குப் பின் செக்யூரிட்டி கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார். ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆலோசகராகப் பணியில் சேர்கிறார். (ஆலோசகர் என்றதும் ஏதோ  பெரிய தொழில் நுட்ப வேலை என்று எண்ணம் கொள்ளாதீர்கள். பள்ளிக்கூடம் தொடர்பான வேலைகளைத் தன் முன்னாள் அலுவலகத்தில் இப்போதைய அலுவலரின் முன்னால் போய் நின்று பல்லை இளித்து அனுகூல ஆணை பெற வேண்டிய தரகர் வேலை) இவர்களுக்கெல்லாம் சொந்தமாக ஒரு டீக்கடை கூட வைத்து நடத்த முடியாது.

tea shopgrocery shpPlaceholder Image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s